சீனித் தொழிற்சாலைகளின் துணைத்தயாரிப்பான எதனோல் தற்பொழுது மிகையாகக் காணப்படுவதாகப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது. அதற்கமைய, அந்த எதனோலை தரநிலையுடன் ஏற்றுமதி செய்ய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் அதிகாரிகளினால் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன தலைமையில் குறித்த குழு, 2023.11.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எதனோல் இறக்குமதியைத் தடை செய்ததன் மூலம் சீனித் தொழிற்சாலைகள் தற்பொழுது இலாபமடைந்து வருவதாகவும் குழுவில் புலப்பட்டது. சீனி உற்பத்தியில் துணைத்தயாரிப்பான இந்த எதனோல், மதுபானத் தயாரிப்புக்காக பயன்படுத்துவதால் அந்த சீனித் தொழிற்சாலைகளுக்கு மதுபானத் தயாரிப்புக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது மிகவும் வினைத்திறனானது என அதிகாரிகள் குழுவில் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நாட்டில் சீனியின் தேவை சுமார் 06 இலட்சம் மெட்றிக் டொன் எனவும் அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும் அந்தத் தேவைக்கு, இலங்கையில் 10 % வீதமான அளவு, அதாவது 60,000 மெட்றிக் டொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாகக் குழுவில் புலப்பட்டது.
அதற்கமைய, 2024 அம ஆண்டில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான செயற்திட்டமொன்றை மூன்று மாதங்களில் தயாரித்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு குழு ஆலோசனை வழங்கியது.
அத்துடன், சீனி நுகர்வு தொடர்பில் இந்நாட்டு மக்களிடம் காணப்படும் விழிப்புணர்வு மிகவும் குறைவானது என்பதால் சரியான சீனி நுகர்வு முறை தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்குக் குழு ஆலோசனை வழங்கியது.
பனஞ்சாராயம் உள்ளிட்ட இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மதுபானங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கேள்வி இருந்தாலும் தரநிலையில் உள்ள குறைபாடுகள் காரணமாக சந்தையை விரிவாக்க முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, உரிய தரநிலையுடன் இந்நாட்டின் மதுபான வகைகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பி.வை.ஜீ. ரத்னசேகர, கௌரவ கே. சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.