2026 ரி20 உலகக் கிண்ணம்: திகதி விபரம் அறிவிப்பு

இருபது அணிகளின் பங்கேற்புடன் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் பெப்ரவரி 7 மற்றும் மார்ச் 8 ஆம் திகதிகளுக்கு இடையே நடைபெற வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் குறைந்தது ஐந்து மைதானங்களிலும் இலங்கையில் இரண்டு மைதானங்களிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி பாகிஸ்தான் ஆடுவதைப் பொறுத்து அஹமதாபாத் அல்லது கொழும்பில் நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மற்ற நாட்டில் கிரிக்கெட் ஆடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) இன்னும் போட்டி அட்டவணையை உறுதி செய்யாத நிலையில் போட்டி விபரங்கள் தொடர்பில் ‘கிரிக்கின்போ’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை தற்போது 15 அணிகள் உறுதி செய்துள்ளன. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, அயர்லாந்து, கனடா, நெதர்லாந்துடன் முதல் முறையாக இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய ஐந்து அணிகளில் இரு அணிகள் ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்தும் மூன்று அணிகள் ஆசிய மற்றும் கிழக்காசிய பசுபிக் பிராந்தியத்தில் இருந்தும் தகுதிபெறவுள்ளன.

2024இல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டி வடிவிலேயே இம்முறையும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்படி இருபது அணிகளும் தலா ஐந்து அணிகள் என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்று போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

இந்த எட்டு அணிகளும் தலா நான்கு அணிகள் என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவிருப்பதோடு இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

கடந்த முறை பார்படொஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை வென்றது. தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Related Articles

Latest Articles