லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஆறு அணிகள் கொண்ட ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பரிந்துரை செய்துள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக் குழு ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் புதிய விளையாட்டுகள் தொடர்பில் வரும் மார்ச் மாதம் இறுதி செய்த பின், வரும் ஓக்டோபரில் சர்வதேச ஒலிம்பிக் குழு இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்தப் பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில், நிர்ணயிக்கப்படும் இறுதித் திகதிக்கு ஆடவர் மற்றும் மகளிர் டி20 தரவரிசையில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். டி20 வடிவத்திலேயே போட்டிகள் நடத்தப்படும்.
2028 ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கு கிரிக்கெட்டுடன் பேஸ்போல் அல்லது சொப்ட்போல், கராத்தே, கிக் பொக்சின் உட்பட எட்டு விளையாட்டுகள் போட்டியிடுகின்றன.
ஒலிம்பிக் வரலாற்றில் 1896 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளடக்கப்பட்டபோதும் போட்டியிடுவதற்கு அணிகள் இடம்பெறாததால் அந்த விளையாட்டு இணைக்கப்படவில்லை. எனினும் 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றது. அதில் பிரிட்டன் மற்றும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் மாத்திரமே போட்டியில் பங்கேற்றதோடு பிரிட்டன் தங்கப் பதக்கத்தை வென்றது.