2050 ல் பெருந்தோட்ட முறைமை இல்லாமலாக்கப்படும்!- புதிய அரசியல் முன்நகர்வு அவசியம் என்கிறார் திலகர்

மலையகம் 200 நினைவுகூர்தலின்போது மலையகம் 100 இனை நினைத்துப் பார்ப்பதும் அவசியம். அப்போது அனுஷ்டிப்புகள் இல்லாதபோதும் அமைப்பாக்க முயற்சியாக பெருந்தோட்டக் கட்டமைப்பைத் தழுவிய தொழிற்சங்க கலாசாரம் முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இருந்தே மலையகம் 200 வரையான அரசியல் அமைப்பாக்கம் நகர்ந்து வந்துள்ளது. ஆனால் 2050 ஆண்டு ஆகும்போது பெருந்தோட்ட முறைமை முற்றாக இல்லாமலாக்கபடவுள்ளது. அதனை அடியொட்டி வந்த தொழிற்சங்க அரசியல் போக்கும் சரிவுப் போக்கில் செல்கிறது.

எனவே மலையகம் 300 ஐ எதிர்கொள்ள புதிய அரசியல் முன்னகர்வினை மலையக இளைய தலைமுறையினர் இப்போதே கண்டடைய வேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

சமூக நீதி கட்சி ஒழுங்கு செய்திருந்த மலையகம் – 200 ஆய்வரங்கம் கடந்த சனிக்கிழமை (22/7) கொழும்பில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் நஜா மொஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், கலாநிதி. அகிலன் கதிர்காமர் , ஆய்வாளர் சிராஜ் மஷ்ஹூர், சிவில் சமூகச் செயற்பாட்டாளர் பெ. முத்துலிங்கம், கவிஞர் சி. கருணாகரன், பெண்நிலை செயற்பாட்டாளர் மாதவகலா ஆகியோருடன் பேச்சாளராக்கலந்து கொண்டு ‘மலையகம் 300: அர்த்தமுள்ள குடியுரிமையை நோக்கிய அரசியல் நகர்வுகளின் அவசியம்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,

மலையகம் 200 என தலைப்பிட்டு தலைநகர் முதல் நாடு தழுவிய நிகழ்வுகள் நடப்பதானது அந்தச் சமூகம் தன்னை வியாபித்துக் கொண்டுள்ளதன் அடையாளமாகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இந்திய வம்சாவளி தொடர்பு கொண்ட பல தரப்பினர் இலங்கையில் வாழ்ந்தபோதும் மலையகப் பெருந்தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ‘கூலிகள்’ என கொண்டுவந்து இருத்தப்பட்டோரே இன்றைய மலையகம் 200 இன் உரிமைதார்களாகும்.

ஏனையோர் எந்த அடையாளத்தையும் தமதாக்கிக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.

ஆனால் ‘கூலிகள்’ என அழைக்கப்பட்ட தம்மை இன்று ‘மலையகத் தமிழர்’ என நாகரிகமாக தேசிய அந்தஸ்த்துடன் அழைப்பதற்கு வழங்கிய உழைப்பு அளப்பரியது.
முதல் 100 ஆண்டுகளும் அடிமைகளாக நடாத்தப்பட்டவர்கள் மத்தியில் மலையகம் 100 ல் எழுந்த எழுச்சியின் காரணாமாக தொழிற்சங்க அமைப்பாக்கம் பெற்றனர். கூடவே பண்பாட்டு, கலை இலக்கிய வடிவங்களையும் கண்டடைந்தனர்.

அன்று பெருந்தோட்டத்துறை அடிப்படையில் உருவான தொழிற்சங்க அமைப்பாகத்தின் ஊடாக பெற்ற அரசியல் சமூக அடையாளந்தான் இன்றுவரை அவர்களை அரசியல் ரீதியாக பிரதநிதித்துவம் செய்து வருகிறது.

ஆனாலும் அந்தப் பெருந்தோட்ட முறைமை கடந்த 100 ஆண்டுகளில் பாரிய கட்டமைப்பு மாற்றத்தைக் கண்டு வந்துள்ளது. பிரித்தானிய கம்பனிகளின் கீழ் 100 % ஆக இருந்த பெருந்தோட்டங்கள் 1972 ஆண்டு அரசுடைமாக்கப்படும் போது 75% ஆக குறைந்தது. மிகுதி 25% சிறுதோட்ட உடமையாது. அதுவே 1992 ஆம் ஆண்டு ஆகும்போது 50% க்கு 50% என்று ஆனது.

இன்றைய திகதியில் பெருந்தோட்ட முறைமை 25% ஆக குறைக்கப்பட்டு சிறுதொட்ட உடமை 75 % ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் 75 % சிறுதோட்ட உடமையில் 99.9% சிங்கள மக்களாக உள்ள அதே நேரம் 25% பெருந்தோட்டத்தில் 99% தொழிலாளர்கள் தமிழர்களாக வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2050 ஆம் ஆண்டு ஆகும்போது 100% சிறுதோட்ட உடமையாக்கப்பட்டு பெருந்தோட்ட முறைமையை இல்லாமலாக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே 2050 வரை இப்போதைய அரசியல் செல்நெறியே கடைபிடிக்கப்படுமானால் அது முற்றுமுழுதான தோல்வியிலேயே போய் முடியும்.

Related Articles

Latest Articles