21 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2030 இல் தோகாவில்

2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி தோகாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

4 ஆண்டுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த போட்டி 2018 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடந்தது. 2022ஆம் ஆண்டுக்கான போட்டியை சீனாவும், 2026ஆம் ஆண்டுக்கான போட்டியை ஜப்பானும் நடத்தும் உரிமையை பெற்று இருக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்கான 21ஆவது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று நடந்தது.

இந்த போட்டியை தங்கள் நாட்டின் தலைநகர் தோகாவில் நடத்த கத்தாரும், தங்கள் நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடத்த சவூதி அரேபியாவும் விண்ணப்பித்து இருந்தன.

போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியதால் யாருக்கு உரிமம் வழங்குவது என்பதை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஆன்-லைன் மற்றும் வாக்குச்சீட்டு மூலம் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்-லைன் வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது. முடிவில் அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமம் வழங்கப்படுவதாகவும், 2-வது இடத்தை பெற்ற சவூதி அரேபியாவுக்கு 2034-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது.

Related Articles

Latest Articles