நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் பேரணிக்குரிய ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.
“ஜனநாயகம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை விரும்புபவர்கள் 21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்பார்கள். அதேபோல வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, இதனை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தி கொடுப்பதற்கு விரும்புபவர்களும் வருவார்கள்.
சிலவேளை எவருக்கேனும் பங்கேற்க முடியாவிட்டால் ஆதரவையேனும் வெளிப்படுத்த வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் கூட்டு நடவடிக்கை என்பதாலேயே அனைத்து கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுவருகின்றது.” எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.
