சிலாபம் நகரை ஒரு வார காலத்துக்கு முடக்குவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இவ்வாறு நகரை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் நகரசபைத் தலைவர் துஷான் அபேசேக்கர தெரிவித்துள்ளார்.
சிலாபம் நகரசபைத் தலைவர் துஷான் அபேசேக்கர தலைமையில் 17 ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பு எதிர்த் தரப்பு உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் நகரை முழுமையாக முடக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
இது வரை சிலாபம் நகர் சுகாதாரப் பிரிவுக்குள் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுமார் 700 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு சிலாபம் நகரசபைக்கு அறிவித்துள்ளதையடுத்தே நகர சபைத் தலைவர் தலைமையில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி 21 ஆம்திபதி முதல் சகல வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து மீன் சந்தை, காய்கறிச் சந்தை மூடப்பட்டிருக்கும்.
வங்கிகள் , பார்மஸிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்.
அத்துடன் இத்தீர்மானத்துக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கமும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. சிலாபம் வர்த்தகர் சங்கம் இது தொடர்பில் ஏனைய வர்த்தகர்களுக்கான அறிவித்தலையும் விடுத்து வருகிறது.
சிலாபம் நகர சபை இந்த ஒருவார கால முடக்கம் தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கவும் உத்தேசித்துள்ளது.
