21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் கடந்த காலங்களில் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. சம்பவங்கள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவில்லை. எனினும் தற்போது அனைத்து பக்கங்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.
21/4 தாக்குதல் தாக்குதல் தொடர்பில் இன்று மாலை விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” சஹ்ரான் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறுகியகால திட்டமிடல் அல்ல. அது நீண்டிகால திட்டமிடலாகும். 21/4 தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்தது.
குறிப்பாக காத்தான்குடியில் இடம்பெற்ற தாக்குதல்கள், மாவனல்லை புத்தர்சிலைகள்மீதான தாக்குதல்கள், மாவனல்லை துப்பாக்கிச்சூட்டு சம்பவம், வவுனதீவு பொலிஸார் படுகொலை, வனாத்தவில்லு சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளன என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறவில்லை. விசாரணைகளை முன்னெடுத்த தரப்புகளுக்கிடையில் தகவல் பரிமாற்றம் இருக்கவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், இது தொடர்பான விசாரணைகளை வேகமாக முன்னெடுக்கவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமான அதிகாரம், சுதந்திரம் எனக்கு வழங்கப்பட்டது.
இதன்படி விசாரணை கட்டமைப்பில் அதிகாரிகள் மாற்றப்பட்டன. இதுவரை கவனம் செலுத்தப்படாத பக்கங்கள் ஆராயப்பட்டன. பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றன. இதன்மூலம் பல தகவல்களை வெளிக்கொணர முடிந்தது. இன்னும் விசாரணைகள் தொடர்கின்றன. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தேவையான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவேதான் முழுமையான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விசாரணைகள் தொடர்பான முழுமையான தகவல்களை மக்களுக்கு பகிரங்கப்படுத்தமுடியாது.” – என்றார்.










