எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மக்களின் குரல் என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று உதயமானது.
இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி மற்றும் நவ ஜனதா பெரமுன ஆகியன இடம்பெற்றுள்ளன.
அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒரு பாரிய பேரணியை இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் நாடு முழுவதும் தொடர் பேரணிகள் நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்;களின் வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, 21 ஆம் திகதி கூட்டு சமரில் பங்கேற்குமாறு மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதில் பங்கேற்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்காது.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், மஹிந்த சூறாவளி எனும் பிரச்சாரம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.
