” ஐக்கிய தேசியக் கட்சியானது கடந்த காலத்தில் 25 லட்சம் சிங்கள வாக்குகளை இழந்துவிட்டது. அதனை மீளப்பெற்று, தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் தக்கவைத்துக்கொண்டு கட்சி முன்நோக்கி பயணிக்கும்.” – என்று ஐ.தே.கவின் தலைவரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இம்முறை நடைபெறும் தேர்தலும் ஒரு சவால்மிக்கவிடயம்தான். இருந்தாலும் கொரோனாவுக்கு மத்தியில் நாட்டை எவ்வாறு முன்நோக்கி அழைத்துசெல்வது என்பதுதான் பிரதான சவாலாகும். அதற்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம்.
1993 ஆம் ஆண்டு நான் பிரதமரானபோது, லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்டிருந்தார். எதிரணி எமது பக்கமே விரல் நீட்டியது. மாகாணசபைத் தேர்தலிலும் எதிரணி மூன்று சபைகளைக் கைப்பற்றியது. அதுமட்டுமல்ல ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எமது கட்சியின் பிரதான தலைவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கட்சியை முன்நோக்கி கொண்டுசெல்வது பெரும் சவாலாக இருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு முன்நோக்கி பயணித்தோம்.
இனிவரும் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியாக நாம் முன்நோக்கி செல்வோம். எமக்கு இல்லாமல்போயுள்ள 25 லட்சம் சிங்கள வாக்குகளைப் பெறுவோம். தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் பாதுகாத்துக்கொள்வோம். ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களை மாத்திரம் நிறுத்தக்கூடியதாக இருந்திருந்தால் இனவாத பிரச்சினைகூட ஏற்பட்டிருக்காது.
ஜனாதிபதி தேர்தலின்போது நாம் எவரினதும் காலை வாரவில்லை. ஒற்றுமையாக பயணிக்கவே முயற்சித்தோம். ஆனால் பிரிந்தசென்றுவிட்டனர். பொதுத்தேர்தலில் ஆட்சியைப்பிடிப்பதே எமது இலக்கு. அதனை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தெளிவான முறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் முன்வைத்துள்ளோம்.” – என்றார்