‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டது

தான் இயக்கிய ‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம், ‘லால் சலாம்’.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். இப்படம் நேற்று (பிப்.09) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இப்படம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்துள்ள இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது முதல் படமான ‘3’ குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்று இருந்தால் அதற்கு நாம் தயாராகவே முடியாது. அப்படித்தான் ‘கொலவெறி’ பாடல் எங்கள் வாழ்க்கையில் நடந்தது. ’3’ படத்துக்கு அது ஒரு அழுத்தமாக மாறிவிட்டது. என்னை பொறுத்தவரை அது ஆச்சர்யம் என்பதை விட அதிர்ச்சிதான். ஏனெனில் படமாக நான் சொல்லிக் கொண்டு இருந்தது வேறு. ஆனால் அந்த பாடல் படத்தையே விழுங்கி, அதை பின்னுக்கு தள்ளிவிட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

ஏனென்றால் கதைக்கு முக்கியவத்துவம் உள்ள ஒரு படத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கும்போது, அதன் ரிலீஸின் போது கூட யாரும் அதைப் பற்றி பேசவில்லை. அது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும்போது பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள். அது ரிலீஸ் ஆகும்போது கிடைக்காத வரவேற்பு இப்போதுதான் கிடைக்கிறது. காரணம் அந்த பாடல் அந்த படத்தை மறைத்துவிட்டது. அந்த பாடல் படத்துக்கு உதவியதா என்றால் இல்லவே இல்லை. நிறைய பேரின் வாழ்க்கைக்கு உதவியது என்றால் அது நல்ல விஷயம் தான்” என்று கூறினார்.

Related Articles

Latest Articles