நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவது நேரத்தையும், மக்கள் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும். நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படுவதான் நோக்கத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி, புதிய கூட்டத்தொடருக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனினும், தான் நினைக்கும் நேரங்களில் எல்லாம் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல, இதற்கு முன்னர் அவ்வாறு நடந்தது கிடையாது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரே பெப்ரவரி மாதம் ஆரம்பமாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் 5 கூட்டத்தொடர்கள், இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டுவரை இருந்த நாடாளுமன்றத்திலேயே 5 தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் 10 வருடங்கள்.
எனவே, இவ்வாறு நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவது நேரத்தையும், பணத்தையும் நாசமாக்கும் செயல். நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதும் நாடாளுமன்ற குழுக்களும் கலைந்துவிடும், அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்களும் கலைந்துவிடும்.
சம்பிரதாயப்பூர்வமாக ஜனாதிபதியால் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டு, விருந்துபசாரமும் நடத்தப்படும். எனவே, எதற்காக நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படுகின்றது,
இடைநிறுத்தப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவென்பதை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.” – என்றார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று இடைநிறுத்தப்படவுள்ளது.
