பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இன்றிரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி காலை 4 மணிவரை மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் எனவும், இக்காலப்பகுதியில் எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் திறக்க முடியாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்றிரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி காலை 4 மணிவரை அமுல்படுத்தப்படும் தொடர் பயணத்தடையின்போது மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். இக்காலப்பகுதியில் வர்த்த நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. அனைத்து கடைகளும் மூடப்படவேண்டும்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ளமுடியும். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். மருந்து பொருட்களை விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்படும்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கமைய வீட்டைவிட்டு வெளியேறும் நடைமுறை 17 ஆம் திகதி முதலே அமுல்படுத்தப்படும். மேற்படி மூன்று நாட்களுக்கு அந்நடைமுறை பொருந்தாது. அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும்.” – என்றார்.
