இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
‘இஸ்ரேல்- ஹமாஸ் போர்’ கடந்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேலிலும் ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் நான்கு நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
முதல் கட்டமாக 13 பேரும், பின்னர் 17 பேரும் என ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.
போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில், கட்டார் நாட்டின் மத்தியஸ்த பேச்சின் பலனாக மேலும் இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது.
இதனால், பணய கைதிகள் விடுவிப்புக்கான சாத்தியமும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று 30 பாலஸ்தீனிய கைதிகள், இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும் இரு வெளிநாட்டவர்கள், 10 இஸ்ரேலியர்கள் உட்பட 12 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.