30,000 குடும்பங்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு

மகாவலி கங்கையின் நீர் மிகவும் வற்றி, நிலம் வரண்டு காணப்படுவதால் குண்டசாலை நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் நீரைப் பெற்றுக்கொள்ளும் சுமார் 30,000 குடும்பங்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மகாவலி ஆற்றின் ஊடாக விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குச் செல்லும் நீர் பல்லேகல பிரதேசத்தில் வழிமறித்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு குண்டசாலை, பலகொல்ல, திகன, வராபிட்டிய உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சுமார் 30,000 குடும்பங்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மகாவலி கங்கையின் நீர் வெகுவாகக் குறைந்துள்ளதாலும், சில பகுதிகளில் தொடர்ச்சியாக ஐந்தாறு நாட்களுக்கு நீர் நிறுத்தப்படும் அளவிற்கு குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லேகல முதலீட்டு வலயம், மத்திய மாகாண சபை வளாகம், தும்பற திறந்த சிறைச்சாலை, ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் அங்குள்ள முக்கிய இடங்கள் உட்பட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குண்டசாலை நீர்த்திட்டத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச மக்கள், பலகொல்லயில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தொடர்ந்து ஐந்து நாட்களாக தண்ணீர் வராததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நோன்பு காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தண்ணீர் கிடைக்க வேறு மாற்று வழிகள் இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே, தங்களுக்கு விரைவில் தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குண்டசாலை நீர்த்திட்ட முகாமையாளர் மற்றும் நீர்த்திட்ட பொறியியலாளர் எச்.பி.கே.எஸ். பதிரணவிடம் கேட்கப்பட்டபோது குண்டசாலை நீர்த்திட்டத்தின் மூலம் 30,000 குடும்பங்களைச் சேர்ந்த 150,000 பேருக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது.

மகாவலி ஆறு வரண்டு கிடப்பதால், இந்நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு பல மாற்று திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Articles

Latest Articles