கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தோல்விகண்டுள்ள ராஜபக்ச அரசு, தனது இயலாமையை மூடிமறைக்கவே வைரஸ் பரவலுக்கு எதிரணிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என அறிவிப்பு விடுத்துவருகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் பரவல், கட்டுப்படுத்த முடியாத கட்டத்துக்கு வந்துள்ளது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். எனவேதான் இதற்கான பழியை எவர் மீதாவது திணித்துவிட்டு தப்பித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன்பிரகாரமே வேலைநிறுத்தப்போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களே வைரஸ் பரவலுக்கு காரணம் எனவும், சுமார் 30 லட்சம்பேர்வரை வீதிகளில் இறக்கப்பட்டனர் எனவும் ஆளுந்தரப்பால் தகவல் வெளியிடப்படுகின்றது.
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் 99வீதமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்களில் 85 வீதமானோர் கோட்டாபய ராஜபக்சவுக்கே வாக்களித்தனர். எனவே, எதற்காக ஆசிரியர்கள் போராடுகின்றனர் என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் நாட்டை ஆளவில்லை. ஆனாலும் நாம்தான் ஆட்சியாளர்கள் என நினைத்துக்கொண்டே ஆளுந்தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதேவேளை, நாட்டின் உண்மை நிலைவரத்தை எடுத்துரைப்பதற்கு சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா முயற்சித்துள்ளார். ஆனால் அவர் தடுக்கப்பட்டுள்ளார். நிலைமை மோசம், நாட்டை முடக்குமாறே அவர் வேண்டுகோள் விடுக்க சென்றுள்ளார். அவரின் கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை. இவ்வாறு தன்னிச்சையாக செயற்படும் அரசு, பழியை எதிரணிமீது சுமத்துவது நகைப்புக்குரிய விடயமாகும்.” – என்றார்.
