நுவரெலியாவிலிருந்து தலவாக்கலைவரை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இதனால் தனியார் பஸ் சேவையை நம்பி நுவரெலியாவிலிருந்து தலவாக்கலைக்கும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியாவுக்கும் பயணிக்கும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், நுவரெலியா தொடக்கம் ஹட்டன் வரை பயணிக்கும் சொகுசு பஸ் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
அதேநேரத்தில் நுவரெலியாவிலிருந்து தலவாக்கலையை நோக்கி நானு ஓயா டெஸ்போட் சுற்று பாதையில் பயணிக்கும் அதிக அளவிலான பயணிகளின் போக்குவரத்து நன்மை கருதி இவ்வீதி ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை அதிகரித்து சேவையில் ஈடுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க ஹட்டனில் இருந்த பயணிக்கும் தனியார் சொகுசு பஸ்சேவை மற்றும் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா, டயகம வரையும் மற்றும் குறுந்தூர சேவையில் ஈடுப்படும் தனியார் பஸ் சேவை உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இடையில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற முறுகல் நிலைக்கு சமரச பேச்சு நடத்த மத்தியமாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் தனியார் பஸ் சாரதிகள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலும் ,தலவாக்கலை தொடக்கம் நுவரெலியா வரை சேவையில் ஈடுப்பட்ட தனியார் பஸ் தாக்கப்பட்டத தொடர்பிலும் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இருவர் (02) மாலை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் இதுவரை காலமும் நுவரெலியாவிலிருந்து இரதல்ல குறுந்தூர பாதை வழியாக ஹட்டன் நோக்கி பயணித்து வந்த தனியார் சொகுசு பஸ்களை நானு ஓயா டெஸ்போட் சுற்று பாதையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலவாக்கலை- நுவரெலியா தனியார் பஸ் சாரதிகள் வேண்டுகோள் ஒன்றை மாகாண போக்குவரத்து சபைக்கு முன் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இரதல்ல குறுந்தூர வீதியில் செலுத்தப்படும் சொகுசு பஸ்கள் பயணிகளை ஏற்றியப்பின் இவ்வீதியில் பயணிக்க தடை உத்தரவிடப்பட்டுள்ள கணரக வாகனங்களின் பாரத்திற்கு உட்படுத்தால் சொகுசு பஸ் சேவை இவ் வீதியில் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆ. ரமேஷ்
