” வயது என்பது வெறும் நம்பர் தான். திறமைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 45 வயது வரை விளையாடுவேன்.” – என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடிய அவர் 23 சிக்ஸர்கள் உட்பட 288 ஓட்டங்கள் சேர்த்தார். உலகம் முழுவதும் பல்வேறு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் கெய்லிடம் ஓய்வு குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில் ‘இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை. இன்னும் 5 ஆண்டுகள் என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என்று நம்புகிறேன். அதாவது 45 வயதுக்கு முன்பாக ஓய்வுக்கு வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.
என்னை பொறுத்தவரை வயது என்பது வெறும் நம்பர் தான். திறமைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்றார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்த ஆண்டில் இந்தியாவிலும், 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் நடக்கிறது. இவ்விரு உலக கோப்பை போட்டிகளிலும் பங்கேற்கும் குறிக்கோளுடன் கெய்ல் உள்ளார். அவருக்கு தற்போது 41 வயதாகின்றது.