1950 களில் எழுச்சி பெற்ற சுதந்திரக்கட்சி இன்று வங்குரோத்து நிலையில் – காரணம் என்ன?

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள் உள்ளக மோதலும் வெடித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் சாவிக்கொத்தை தம்வசம் வைத்திருக்க மைத்திரி ஒரு புறத்திலும், மைத்திரியிடம் இருந்து கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா தரப்பினர் மறுபுறத்திலும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பாரம்பரிய – பழமையான கட்சி என்ற முறையில் மக்கள் மத்தியில் இருந்த சொற்ப ஆதரவையும் சுதந்திரக்கட்சி இழந்துவருகின்றது.

தேசிய மட்டத்தில் உதயமான பிரதான அரசியல் கூட்டணிகளுக்கு தலைமைத்துவம் வழங்கி ‘தலைமை’க் கட்சியாக வலம்வந்த சுதந்திரக்கட்சி இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியா, எதிரணியா, சுயாதீன அணியா என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ‘அந்நியன்’ பாணியில் அரசியல் அக்கட்சி அரசியல் நடத்திவருகின்றது. இந்நிலையில்தான் கட்சிக்குள் உள்ளக பூகம்பமும் வெடித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் பதவியை வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுக்கு ஆதரவு வழங்கிவரும் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சுகவில் வகித்துவரும் பதவிகளில் இருந்து மைத்திரியால அதிரடியாக நீக்கப்பட்டனர்.
மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும், லசந்த அழகியவன்ன பொருளாளர் பதவியில் இருந்தும், துமிந்த திஸாநாயக்க தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். மைத்திரி தலைமையிலான இந்த அணியின் நடவடிக்கைக்கு எதிராக நீக்கப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றனர். அதன்பின்னர் கட்சி தலைமையகத்துக்கு வந்து ஊடக சந்திப்பொன்றையும் நடத்தினர்.

இதற்கிடையில்தான் சந்திரிக்கா அம்மையாரால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கொன்றின் அடிப்படையில், மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியின் தவிசாளர் பதவியை வகிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நிமல் சிறிபாலடி சில்வா தரப்பு அவசரமாக அரசியல் உயர்பீடக்கூட்டத்தைக்கூட்டி பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவை நியமித்துள்ளது. இக்கூட்டத்தில் சந்திரிக்கா அம்மையார் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், இக்கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை எனவும், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியற்றவை எனவும் மைத்திரி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு உள்ளக அதிகார மோதல் வலுத்துள்ளதால் சுதந்திரக்கட்சி தலைமையகத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் கொள்கைரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அமரர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க உருவாக்கினார்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்கள மொழி, தேசிய பொருளாதாரம் உட்பட தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் பயணத்தை ஆரம்பித்ததால் மக்கள் மத்தியில் குறுகிய காலப்பகுதிக்குள் ஆதரவலை உருவாகியது.

1952 இல் நடைபெற்ற இலங்கையின் 2ஆவது பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட சுதந்திரக்கட்சி 15.52 சதவீத வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பின்னர் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 39.53 சதவீத வாக்குகளுடன் 51 ஆசனங்களை வென்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டது.

அதாவது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்குள் பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார். 1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பண்டாரநாயக்க (60 வயது) சுட்டுப்படுகொலைசெய்யப்பட்ட பின்னர் தற்காலிக தலைவராக பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த சி.பி.டி. சில்வா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி பண்டாரநாயக்கவின் பாரியாரான ஸ்ரீமாவிடம் கையளிக்கப்பட்டது. அவரும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

இலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

ஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார்.
1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் 1982 ஆம் ஆண்டே முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் சுதந்திரக்கட்சியின் சார்பில் கை சின்னத்தில் கொப்பேகடுவவே போட்டியிட்டார்.1988 இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் களமிறங்கியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார்.

89 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கை சின்னத்திலேயே சு.க. போட்டியிட்டது.1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி, கூட்டணி அமைத்து கதிரை சின்னத்தில் போட்டியிட்டது. பிரதம வேட்பாளராக சந்திரிக்கா களம்கண்டார். இறுதியில் ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சு.கவின் தலைவர் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே கதிரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். 2004 இல் சுதந்திரக்கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதால் அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது.

அதன்பிறகு 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும சுதந்திரக்கட்சி தனது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்கீழ் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கியது. சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ சின்னங்களின்கீழும் சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொண்டிருந்தாலும் – கூட்டணியின் தலைமைப் பதவி , ஜனாதிபதி வேட்பாளர் ஆகியவற்றை பங்காளிகளுக்கு விட்டுக்கொடுத்தில்லை.

எனினும், 37 ஆண்டுகளுக்கு பிறகு 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மேற்படி இரு விடயங்களையும் விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாது, ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தாது, கூட்டணி என்ற போர்வையில் ‘மொட்டி’டம் சரணடைந்து சுதந்திரக்கட்சி.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மூன்று மாவட்டங்களில் அக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் யாழ். மாவட்டத்தில் மாத்திரமே ஒரு ஆசனம் கிடைத்தது. களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனைய வேட்பாளர்கள் மொட்டு கட்சியின் பட்டியலின்கீழ்தான் போட்டியிட்டனர்.
தற்போது எதிரணி எனக் கூறிக்கொண்டாலும் சுதந்திரக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் அரசு பக்கம் உள்ளனர். இருவர் அமைச்சு பதவிகளைக்கூட வகிக்கின்றனர். இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.

1970 காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பெரும் பஞ்சமே அக்காலகட்டத்தில் சுதந்திரக்கட்சிமீது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. இதனால் 77 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ , சந்திரிக்கா, மஹிந்த போன்றவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் வளர்ச்சி கண்ட சுதந்திரக்கட்சி, மைத்திரியின் தலைமையின்கீழ்தான் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பெரும் குழப்பத்துக்கு மத்தியிலேயே கட்சியின் அரசியல் பயணம் தொடர்கின்றது. இம்முறை மே தினத்தைக்கூட நடத்த முடியுமா என்பது சந்தேகமே.

அதிகாரப்போட்டியாலும், உள்ளக மோதல்களாலும் 2019 இல் ஐக்கிய தேசியக்கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டது. தேசிய பட்டியல் ஊடாகவே ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது. மொட்டு கட்சியுடன் கூட்டு வைத்ததால் மைத்திரி தரப்பின் மானம் ஓரளவு காக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வழியில் சு.க. பயணித்தால் ஐதேகவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும். அக்கட்சியை பண்டாரநாயக்கவின் ஆத்மாவால்கூட காப்பாற்ற முடியாமல்போகும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles