500 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை படைத்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான நேற்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், கிரேக் பிராத்வெய்ட்டின் (19 ஓட்டங்கள்) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார்.
இது ஸ்டூவர்ட் பிராட்டின் 500ஆவது டெஸ்ட் விக்கெட் (140-வது போட்டி) ஆகும். இதன் மூலம் இந்த இலக்கை கடந்த பந்து வீச்சாளர்களின் வரிசையில் 7-வது வீரராக ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார்.
மேலும் இந்த மைல்கல்லை குறைந்த வயதில் எட்டிய 2ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். பிராட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 32 நாட்கள். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவரை விட குறைந்த வயதில் (31 ஆண்டு 334 நாட்கள்) சாதித்த பந்துவீச்சாளர் ஆவார்.