தற்போதைய எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தனியார் பயணிகள் பொது போக்குவரத்து சேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
தனியார் பஸ்கள் மற்றும் சிசு சரிய பஸ்களுக்கு எவ்வித தடையுமின்றி எரிபொருள் வழங்கப்பட வேண்டிய முறை தொடர்பில் ஆளுநர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியதுடன் அதற்கான வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மாகாண பிரதான செயலாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் இலகுரக வாகனங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வேன்களுக்கு எரிபொருள் வழங்கும் முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தைத் தடங்கலின்றி தொடரும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக முறைகேடுகள் செய்து பயனைப் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு எரிபொருள் வழங்குவதை இடைநிறுத்தவும் இதன்போது ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் எம். எம். விஜயநாயக, பிரதி பிரதான செயலாளர் (திட்டமிடல்) ஆர்.எச்.சி. பிரியந்தி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சி. அத்தரவத்த, கூட்டுறவு எரிபொருள் நிலைய மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ராமு தனராஜா










