பதவி விலக அரவிந்தகுமார் தயாரா? சேவைப்பட்டியலை வெளியிட்டு சிவலிங்கம் சவால் விடுப்பு!
ஊவாவில் வரலாறுகாணாத அபிவிருத்தியை முன்னெடுத்த ஆளுமைமிக்க தலைவரே செந்தில் தொண்டமான்!
– அபிவிருதிகளை ஆவணங்களுடன் பட்டியலிட தயார் : வாபஸ் பெற அரவிந்தகுமார் தயாரா என சிவலிங்கம் பகிரங்க சவால் விடுப்பு –
ஊவாமாகாண அரசியல் வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளையில் எந்தவொரு தமிழ் அரசியல் வாதியும் செய்யாத பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளார். 6000ம் மில்லியனுக்கும் அதிகமான நிதியை தோட்டப்புறங்களின் பாதை அபிவிருத்திக்கு மாத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளார் என ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊவாவில் கிட்டத்தட்ட 134 கிலோ மீற்றர் தோட்டப்புற பாதை கார்ப்ட் இடப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் ஊவாவில் உள்ள அனைத்து தோட்டங்களுக்கும் காபட் பாதை போடப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்மைவிட அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ள எவரும் அதனை பட்டியலிட தயார் என்றால் தாம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற தயாரென கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சிவலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஊவாவில் செந்தில் தொண்டமானின் அரசியல் பயணம் ஆரம்பமான நாள் முதல் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தோட்டப்புறங்களை நோக்கிக் கொண்டுவரப்பட்டுள்ளன. எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்திராத அபிவிருத்திட்டங்களை செந்தில் தொண்டமான் செய்துள்ளார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தோட்ட உட்கட்டமைப்பு, கலாசாரம் என அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தியை செய்துள்ள ஒரே ஆளுமைமிக்க தலைவர் செந்தில் தொண்டமான்தான்.
ஏ.டி.பி மூலம் 4500 மில்லியனுக்கும் அதிகமான நிதியை தோட்டப்புற பாதைகளை கார்ப்ட் செய்வதற்காக 36 தடவைகளுக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொடுத்துள்ளார். அத்தோடு மாகாண சபை மூலமாக 1700 மில்லியனுக்கும் அதிகமான நிதியையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 7000ம் மில்லியன் வரையான நிதியை தோட்டப்புற பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரம் ஒரு மாகாண அமைச்சராக இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதுவரை மலையகத்தில் தமிழ் அமைச்சராகவிருந்த எவரும் செய்யாத அபிவிருத்திகளை செந்தில் தொண்டமான் ஊவாவில் செய்துள்ளதுடன், அவர்களைவிட குறைந்தது ஒரு ரூபாவேனும் அதிகமாக அபிவிருத்தியை செய்திருப்பார்.
தோட்டப்புற பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரமே இந்தளவு நிதியை பெற்றுக்கொடுள்ள அவர் தோட்ட உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உட்பட ஏனைய அபிவிருத்திக்கும் பாரிய நிதியை பெற்றுக்கொடுத்துள்ளார். அவரின் அபிவிருத்திகளை ஓர் அறிக்கையில் பட்டியலிட்டுவிட முடியாது.
செந்தில் தொண்டமான் செய்துள்ள சேவையில் துளியளவும் செய்யாத அரவிந்தகுமார் வெட்டிப் பேச்சு பேசிவருகின்றனர். செந்தில் தொண்டமானின் சேவைகளை பட்டியலிட நாம் தயாராகவுள்ளோம். அரவிந்தகுமார் வாபஸ் பெறுவதற்கு தயாரா?. ஊவாவில் செந்தில் தொண்டமான்தான் ஹீரோ மற்றவர்கள் எல்லாம் ஷீரோ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.