இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் பெற்ற வீரரான மலிந்த புஷ்பகுமார, கடந்த தசாப்தத்தில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி 2010 இல் இருந்து 2019/2020 பருவத்தில் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக ஆடும் 33 வயதான புஷ்பகுமார 667 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியுசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் படேல் முதலிடத்தை பிடித்திருப்பதோடு இந்தக் காலப்பிரிவில் அவர் மொத்தம் 695 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
எனினும் படேல் இலங்கை வீரர் புஷ்பகுமாரவை விடவும் மேலதிகமாக 95 போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரீமியர் லீக் சம்பியன் அணியான கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் பிரதான பந்துவீச்சாளரான புஷ்பகுமார இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார்.
எனினும் முதல்தர போட்டிகளில் அதிக அனுபத்தை பெற்றவராக அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் 139 முதல்தரப் போட்டிகளில் 793 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன், 2019 இல் சரசென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது இலங்கை முதல்தர இன்னிங்ஸ் ஒன்றில் சிறந்த பந்துவீச்சாக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு லும்பினி கல்லூரியில் தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்த புஷ்பகுமார இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் இலங்கை ஏ அணிகளுக்காக ஆடியபோதும் ரங்க ஹேரத்தின் ஓய்வுக்குப் பின்னரே தேசிய அணியில் விளையாட வாய்ப்பை பெற்றார்