‘800’ படத்தில் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த மாட்டோம்’ – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

” உலக சாதனை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் ‘800’ என்ற படத்தில் எந்தவித அரசியலும் கிடையாது.” – என்று குறித்த படதயாரிப்பு நிறுவனமான டி.ஏ.ஆர் மோஷன் பிக்சர்ஸ் விளக்கம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“இது முற்றிலும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை – விளையாட்டு சம்மந்தப்பட்டப் படமே தவிர எந்தவித அரசியலும் கிடையாது. ஆனால், இந்தப் படம் பல வழிகளில் அரசியல் மயமாகக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் விளையாட்டுப் படம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பலத் தடைகளைத்தாண்டி உலகளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையம்சம்.

இளம் தலைமுறையினரும் வருங்கால விளையாட்டு வீரர்களும் தங்கள் கனவுகளை அடைய இப்படம் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டங்களைக் சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளைக் கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையை மட்டுமே விதைக்க விரும்புகிறோம். ” – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Paid Ad