85 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுக போட்டியிலேயே அசத்திய மே.தீவுகள் அணி வீரர் –

85 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் சமர் ஜோசப், சாதனை ஒன்றைச் சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, அங்கு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளும் முதலில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 62.1 ஓவர்களில் 188 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியில் கிர்க் மெக்கின்சி மட்டும் அதிகபட்சமாக 50 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் தொடருடன் சமீபத்தில் ஓய்வுபெற்ற டேவிட் வார்னருக்குப் பதிலாக இந்தத் தொடரில் தொடக்க வரிசை வீரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறக்கப்பட்டார்.

மேற்கிந்திய தீவகள் அணியின் அறிமுக வீரர் சமர் ஜோசப் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்திலேயே அவர் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தன்னுடைய கேரியரின் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் போன்ற மகத்தான பேட்ஸ்மேனின் விக்கெட்டை எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உலகளவில் பேசுபொருளானார். இதன்மூலம் 85 ஆண்டுகால சாதனை சமன் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, 1939-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் டைலர் ஜான்சன் என்பவர்தான் தன்னுடைய முதல் பந்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தற்போது சமர் ஜோசப், தாம் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

 

 

Related Articles

Latest Articles