இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் SLS தரச் சான்றிதழ் முத்திரையை போலியாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அவிசாவளையில் மேற்கொண்ட சோதனையின்போது கைப்பற்றியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் ஓகஸ்ட் 21ஆம் திகதி இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல – ருவன்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளையிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லி லீற்றர் முதல் 19 லீற்றர் வரையான குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்கள் இருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் போலியான SLS முத்திரையுடன் 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இந்த குடிநீர் தயாரிப்புகள் இதுவரை சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. முழுக் கையிருப்பையும் அதிகாரிகள் சீல் வைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும்போது தரச் சான்றிதழ் முத்திரை மற்றும் தயாரிப்பு தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
