கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பெற்ற இலாபம் 12 பில்லியன் ரூபா என்றும், இந்த வருடத்தில் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையில் 6 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த இலாபத்தைக் குறித்த நிறுவனம் ஈட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நிறுவனம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தபோதே இந்தத் தகவல் வெளியானது.
டெலிகொம் நிறுவனத்தின் 49.5 சதவீத பங்கு அரசுக்கு சொந்தமானது என்றும், தனியார் மயமாக்கப்பட்டால், அந்தப் பங்குகளே தனியாருக்குச் சொந்தமாகும் என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைய சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய அடுத்த வருடம் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை தொடங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
