இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் – என்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கையில் 1982 இல்தான் முதன்முறையாக ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் சுற்றுலா வழிகாட்டியொருவர், ஆனால் இன்று பாடசாலை செல்லும் வயதில் உள்ள மாணவர்கள் அதனை பாவிக்கும் அளவுக்கு சமூகத்துக்குள் போதைப்பொருள் ஊடுருவியுள்ளது. ஐஸ் போன்ற இரசாயன போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
எனவே, போதைப்பொருட்களுக்கு முடிவுகட்டும் நோக்கில்தான் யுக்திய நடவடிக்கை ஆரம்பமானது, இலங்கை பொலிஸாரால் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்திலேயே யுக்திய நடவடிக்கை செயற்படுத்தப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களை கிராமங்களுக்கு பகிரும், விற்பனை செய்யும் வலையமைப்பில் உள்ளவர்கள் குறிவைக்கப்பட்டனர்,
அவர்களின் பெயர் விவரம் இலங்கையில் உள்ள 45 பொலிஸ் பிரிவுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன,
இந்த வலையமைப்பில் உள்ள 60 வீதமானோர் யுக்திய ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் இரண்டாம் மாத யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்படுவார்கள், போதைப்பொருள் விற்பனைக்கு முடிவுகட்டி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் உருவாகும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும்.” – என்றார்.










