கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள நூல் தொடர்பில் பஸில் ராஜபக்ச கடும் சீற்றத்துடன் இருக்கின்றார் என்று ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படுகின்றன ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மொட்டு கட்சியின் தலைமைத்துவத்தை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கி இருந்தால் கட்சியும் இன்று காணாமல்போய் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கோட்டாவின் ஐந்து நூல்களை கொள்வனவு செய்தேன். மஹிந்த அண்ணனுக்கு ஒன்றை வழங்கினேன். பஸில் அண்ணனுக்கு வழங்குவதற்கு சென்றபோது அவர் கோபமடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் நூலை வழங்கவில்லை. திரும்பி வந்தேன்.
கோட்டாவின் நூலை பெரும்பாலானவர்கள் வாசிக்கவில்லை. இதனால் அது பற்றி தவறான அர்த்தப்படுதல்கள் வழங்கப்பட்டுவருகின்றன. பஸிலும் தவறான அபிப்ராயத்தில் இருக்கிறார் என்றே நான் நினைக்கின்றேன். புத்தகத்தை முறையாக வாசித்தால்தான் அதன் உள்ளடக்கம் புரியும்.
பஸில் ராஜபக்சவிடமும் நூல் பற்றி எவராவது தவறாக எடுத்துரைத்திருக்கலாம். அவ்வாறு கூறும்போது கோபம் வருவது நியாயமானது. ஏனெனில் கட்சி தலைமைத்துவம் வழங்கப்படவில்லை எனவும், அதனால்தான் கோட்டாவின் ஆட்சி தோல்வி அடைந்தது எனவும் ஒருவர் பஸிலிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவியையே விட்டு ஓடியவர், கட்சி தலைமைத்துவத்தை வழங்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அன்று பஸில் எடுத்த முடிவு சரி என்பது இன்று புலனாகின்றது.
கோட்டாபய ராஜபக்சவின் நூல் தொடர்பில் ராஜபக்ச குடும்பம் மகிழ்ச்சியடையகூடிய நிலையில் இல்லை.” – என்றார்.