எடக்கா உடன்படிக்கை எமது நாட்டுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே, அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.
அத்துடன், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவானது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். ஆகவே, எட்கா மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு எதிராக மொட்டு கட்சி எம்.பிக்கள் அணிதிரள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எடக்கா உடன்படிக்கை தொடர்பான பேச்சு கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. ஏப்ரல் மாதமளவில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை கைச்சாத்திட்ட பிறகு அதில் உள்ள எதையும் மாற்ற முடியாத நிலை ஏற்படும். அவ்வாறே உடன்படிக்கை உள்ளது.
எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் இலங்கை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறிவிடும். அத்துடன், நின்றுவிடாமல் ஈழம் உருவாக்கப்படலாம்.
ஆசியாவின் நேட்டோ அமைப்பாகத்தான் குவாட் அமைப்பு காணப்படுகின்றது. எனவே, ஈழம் என்பது இஸ்ரேல்போல் செயற்படும். காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமையே சிங்கள மக்களுக்கு ஏற்படக்கூடும்.
தற்போதைய சூழ்நிலை எமது தலைவிதியை தீர்மானிக்கபோகின்ற தருணமாகும். எனவே, எட்கா உடன்படிக்கைக்கு இடமளிக்ககூடாது. மஹிந்த, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்கள் இது தொடர்பில் மௌனம் காக்கின்றனர். போர்வெற்றிக்கு உரித்துடையவர்கள் இந்த காட்டிக்கொடுப்பில் ஈடுபடக்கூடாது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பான சட்டமூலமும் ஆபத்தானது. எனவே, இவை தடுக்கப்பட வேண்டும். மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுந்து ஜனாதிபதிக்கு தமது நிலைப்பாட்டை அறிவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – என்றார்.