ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்கிரமசிங்க நடத்துவாரா என சிலர் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்னதாகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீடு செல்ல நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கனடாவில் இலங்கையர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அநுர மேலும் கூறியவை வருமாறு,
“எமது நாடு தற்போதைய நிலையில் இருந்து மீள வேண்டுமெனில் அரசியல் மாற்றம் அவசியம். அதனை செய்வதற்கு இவ்வருடம் சிறந்த காலப்பகுதியாகும். செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவேண்டும். பெரும்பாலும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி அத்தேர்தல் நடத்தப்படக்கூடும். விமான ரிக்கெட்டுகளை நீங்கள் ஒதுக்க வேண்டும் என்பதாலேயே முன்கூட்டியே திகதியையும் சொல்லி வைக்கின்றேன்.
மாகாணசபைத் தேர்தல் ஐந்து வருடங்கள் நடக்கவில்லை, உள்ளாட்சிசபைத் தேர்தலும் ஓராண்டு இழுத்தடிக்கப்பட்டுள்ளது, எனவே, ஜனாதிபதி தேர்தல் வைக்கப்படுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஜனாதிபதி தேர்தலை உரிய காலப்பகுதிக்கு நடத்தாமல் இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்பட்டால் அவருக்கு முன்கூட்டியே வீடு செல்ல நேரிடும். தேர்தல் நடத்தப்பட்டால் உரிய காலப்பகுதிக்குள் உரிய வகையில் செல்லலாம். தேசிய மட்ட தேர்தலின்போது பாடம் புகட்டுவதற்காகவே மக்கள் மௌனம் காத்திருக்கின்றனர்.” – என்றார்.
