நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது சபையில் கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. 21 ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 42 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
இலங்கையில் 1947 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் சபாநாயகர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என சில தரப்புகளால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அது உண்மை அல்ல. இது தொடர்பில் சிலர் என்னிடம் தகவல் கோரி இருந்தனர். அந்தவகையிலேயே இப்பதிவு பதவிடப்படுகின்றது.
1947 முதல் 2024 வரை சபாநாயகர்களுக்கு எதிராக ஐந்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஐந்தும் வாக்கெடுப்பின்போது தோல்வி அடைந்துள்ளன. இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தோல்வி அடைந்திருந்தாலும் அதன் பின்னர் இரு சபாநாயகர்கள் பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🛑 01. சுதந்திர இலங்கையில் சபாநாயகர் ஒருவருக்கு எதிராக முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1963 ஆம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியே நிலவியது. அக்கட்சியின் சார்பில் நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்து நாடாளுமன்ற தெரிவாகி இருந்த ஆர்.எஸ். பெல்பொல சபாநாயகராக பதவி வகித்தார்.
பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டன.
1963 நவம்பர் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 68 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எனினும், 1964 ஜனவரி 24 ஆம் திகதி அவர் பதவி விலகினார்.
🛑 02. இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1980 இல் முன்வைக்கப்பட்டது. அப்போது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி நிலவியது. ஆனந்த திஸ்ஸ த அல்விஸின் இராஜினாமாவையடுத்து சபாநாயகர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
1980 டிசம்பர் 13 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 126 வாக்குகள் அளிக்கப்பட்டன. பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் 1983 செப்டம்பர் மாதம் அவர் பதவி விலகினார்.
🛑 03. மூன்றாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1991 ஆம் ஆண்டு சபாநாயகர் எம். எச். மொஹமட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மொஹமட், அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குற்றப்பிரேரணையின்போது பக்கச்சார்பாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பிரேரணைமீது 1991 ஒக்டோபர் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 118 வாக்களும் அளிக்கப்பட்டன. இதன்படி பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
🛑 04. இந்நிலையில் சபாநாயகர் எம்.எச். மொஹமட்டிற்கு எதிராக 1992 இல் மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணைமீது 1992 ஜுன் 9 ஆம் தகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 118 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்அடிப்படையில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
🛑 05. ஐந்தாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டது.
அதேவேளை, 1947 முதல் 2024 வரை நாடாளுமன்றத்தில் பிரதமர்களுக்கு எதிராக 6 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் ஒருவருக்கு எதிராக ஒரேயொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆர்.சனத்
