நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும் நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும், சித்திரை புத்தாண்டு பண்டிகை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடுமுறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக நுவரெலியா பிரதான நகரம், ஹக்கல பூங்கா , விக்டோரியா பூங்கா, கிரகறி பூங்கா, கிரகறி வாவி கரையிலும், உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்ட கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர்.
அத்தோடு நுவரெலியா கிறகரி வாவி கரையில் அமைக்கப் பட்டுள்ள காணிவேல் களியாட்ட நிகழ்வுகளிலும், மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை , நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பொது இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நானுஓயா நிருபர்
		
                                    









