எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் 32 பேர் கொண்ட இலங்கை அணிக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.
சுற்றுப்பயணம் ஒன்றில் பொதுவாக 15 தொடக்கம் 16 வீரர்களே இடம்பெறுவர். எனினும் கொரோனா தொற்றினால் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக காயமடையும் வீரர்களுக்கு உடன் மாற்று வீரர்களை அனுப்ப முடியாத சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாவில் பங்கேற்கும் மேலதிக வீரர்களுக்கு இலங்கை செலவுகளை ஏற்க வேண்டிய தேவை இல்லை.
தென்னாபிரிக்க சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் ஓர் அங்கமான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவிருப்பதோடு இரண்டாவது போட்டி ஜொஹன்னஸ்பேர்க்கில் ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பமாகும்.
இதற்காக 22 வீரர்கள், அணி மருத்துவர் ஒருவர் உட்பட 10 உதவி ஊழியர்கள் கொண்ட 32 பேர் கொண்ட குழாத்தை தென்னாபிரிக்கா அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.சி.சியின் புதிய வழிகாட்டலில் அணியுடன் மருத்துவர் ஒருவரை அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.