ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயாராகிவிட்டது. அதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் இருந்த ஒரு குறைபாட்டை நிவர்த்தி செய்யவே ஜனாதிபதி முயற்சித்தார். இதன்மூலம் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி எடுக்கப்படவில்லை. அவ்வாறு தேர்தலை பிற்போடும் திட்டமும் இல்லை.
தேர்தலுக்கு ஆளுங்கட்சி தயாராகிவிட்டது. எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்த பின்னர் முழுவீச்சுடன் தேர்தல் நடவடிக்கையில் இறங்குவோம்.
எதிரணியில் இருப்பவர்களுக்கு தேர்தலை பிற்போட்டு பழக்கம் இருக்கலாம். அதனால்தான் தேர்தல் குறித்து அவர்களுக்கு சந்தேகம் உள்ளது.
அதேவேளை, இந்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சில தொழிற்சங்கங்கள் முற்படுகின்றன. தீவிராத அமைப்புபோல சில தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. அவற்றின் தலைவர்கள் தீவிரவாதிகள்போல் செயற்படுகின்றனர்.
தமது கோரிக்கையை வென்றெடுக்க மக்களை பணயக் கைதிகளாக்குகின்றனர். புலிகளும் இவ்வாறு மக்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தினர். ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் தீவிரவாதிகள்தான்.” – என்றார்.










