“ தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என நான் நம்பவில்லை. மாறாக பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசும் நோக்கில் அந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம்.” – என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தமிழ்க் கட்சிகள் சில இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தபோவதாக அறிவித்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதாக தற்போது அறிவித்துள்ள பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசும் நோக்கில் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் நோக்கில் அதனை செய்திருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன். இது விடயத்தில் எனக்கும் உரிய விளக்கம் இல்லை.
சிலவேளை வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, 2ஆவது விருப்பு வாக்கை வழங்குவது பற்றிகூட ஆராயப்படலாம். 2ஆவது மற்றும் 3 ஆவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.
கடந்த காலங்களில் இருமுனை போட்டி நிலவியதால் 2ஆம் விருப்பு வாக்கு பற்றி அதிகம் பேசப்படவில்லை. இம்முறை மும்முனை போட்டி நிலவுகின்றது. நாம் சஜித்துடன்தான் நிற்கின்றோம். அவருக்கு 50 வீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கப்பெறும்.” – என்றார்.
