தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எனவே, இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழர் தரப்பு சரிவர பயன்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென தமிழரசுக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், தமிழரசுக் கட்சியின் அனுமதியின்றி பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள கட்சியின் மத்திய குழு உறுப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தமிழ் பொதுவேட்பாளர் என்பது நாடகம் என்பது எனது கருத்து, இதுபோன்று கட்சிக்குள் பல கருத்துகள் இருக்கலாம். இறுதியில் கட்சி எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம்.
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் ஒருவர்தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோகின்றார், எனவே, தமிழ் பொதுவேட்பாளரை கொள்கை அளவில் நாம் ஆதரித்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.
நாட்டில் ஜனாதிபதியொருவரை தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருக்கின்றபோது, அதனை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 2015 இல் நாம் ஆதரித்த வேட்பாளர் வெற்றிபெற்றார். அதன்மூலம் காணி விடுவிப்பு உட்பட பல நன்மைகள் கிடைக்கப்பெற்றன. புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய ஏற்பாடுகள்கூட இடம்பெற்றன. எனினும், அரசியல் குழப்பம் ஏற்பட்டதால் அம்முயற்சி கைகூடவில்லை.” – என்றார்.










