தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களத்தில்

” தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகிறேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்படும் சூழ்நிலையில்தான், இந்த ஐனாதிபதி தேர்தலை நாம், சந்திக்கிறோம்.”

– இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் .

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

” திலீபன் எதற்காக உண்ணாவிரதமிருந்து தனது உயிரை அர்ப்பணித்தாரோ, அத்தகைய தேவை இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது . எமக்கான தீர்வு கிடைத்தபாடில்லை.

அந்தத் தீர்வை நோக்கிய பயணமாக தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஐனாதிபதி வேட்பாளராக, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளராக போட்டியிடுகி றேன்.

ஐனாதிபதியாக வருவதல்ல நோக்கம். இந்த தேர்தல் மூலம் எமக்கான தீர்வை பொற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாகவுள்ளோம் என்பதை காண்பிப்பதற்காக போட்டியிடுகிறேன். எமது மக்கள் நேரகாலத்துடன் பெருவாரியாக சென்று, வாக்களிப்பதனூடாக எமது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும்.

தற்போது ஒரு சிலரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிக் கொண்டிருக்கிறது . அவற்றை அவதானித்தால் தமிழர் பற்றியோ அவர்களுக்கான இனப்பிரச்சினை தீர்வுபற்றியோ அவற்றில் எதுவுமில்லை.

ஊழல், அபிவிருத்தி, ஒரே நாட்டுக்குள் தீர்வு, சமத்துவம் என்று கூறுகிறார்கள். சமத்துவம் என்றால் என்ன ? இந்த நாட்டில் தமிழன் ஐனாதிபதியாக வரமுடியுமா? இதுதான் இந்த நாட்டின் சமத்துவமாகும்.

இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை காண்பிப்பதே நோக்கமாகும். ஒற்றுமையின் பலம் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

Related Articles

Latest Articles