புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளை நாளை(26) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவர்கள் இந்த சம்பவத்தின் காரணமாக எதிர்கொண்டுள்ள அழுத்தம் மற்றும் அவர்களின் மனித உரிமை மீறல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக வௌியானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் போது வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles