தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது கண்டி

2024 பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டிருந்தாலும், கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது வெறும் எம்.பி. பதவி மட்டுமல்ல, அது கண்டி தமிழர்களின் அரசியல் அடையாளம். மக்களின் அபிலாஷைகள் அதிஉயர் சபையில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வழங்கும் அங்கீகாரம். உரிமையுடனும், உணர்வுடனும் சம்பந்தப்பட்ட உன்னதமான அரசியல் உறவு அது. எதிரணிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள்மீது அதிருப்தி இருந்திருக்கும் எனில், ஆளுங்கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரையாவது வெற்றிபெற வைக்கும் வகையில் தமது வாக்குரிமையை தமிழ் மக்கள் பயன்படுத்தாமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் முதன்முதலில் 1947 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை, இந்திய காங்கிரஸ் போட்டியிட்டது.

நாவலப்பிட்டிய தொகுதியில் களமிறங்கிய மலையக காந்தி என போற்றப்படும் கே. இராஜலிங்கம் 7,933 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இதுவே கண்டி மண்ணுக்குரிய முதலாவது தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம். (அப்போது தொகுதிவாரி முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.) இராமானுஜம் என்பவரும் அக்காலப்பகுதியில் கண்டி மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்தார்.

1948 இல் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டதால் 1952 முதல் 1994 ஆம் ஆண்டுவரை கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவில்லை.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 9 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் எஸ். இராஜரட்னம் 38, 343 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவானார்.
கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற மூன்றாவது தமிழர் இவர். விகிதாசார தேர்தல் முறையின்கீழ் கண்டி மாவட்டத்திலிருந்து சபைக்கு சென்ற முதல் தமிழர் இவர்.

1947 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 4 தசாப்தங்களாக தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமின்றி கண்டி தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றிருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு அது நீடிக்கவில்லை.

அதன்பின்னர் நடைபெற்ற 2000, 2001, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின்போதும் கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை.

இவ்வாறு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஆயுள் ஒரு தவணைக்கு மாத்திரம் மட்டுப்படுவதும், அதன்பிறகு பல ஆண்டுகள் இல்லாமல்போவதுமான அரசியல் நிலைமையால் அபிவிருத்தி மற்றும் உரிமைசார் விடயங்களில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம். ( அந்த காலப்பகுதி அரசியல் நிலைவரம் அவ்வாறே காணப்பட்டது.)

இந்நிலையில் 2015 பொதுத்தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பட்டதாரி ஆசிரியரான வேலுகுமார் வெற்றிபெற்றார்.

2020 பொதுத்தேர்தலிலும் கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது. தமிழ் பேசும் சமூகமாக முஸ்லிம் உறவுகளும் இதற்கு வழங்கிய பங்களிப்பு மகத்தானது. வேலுகுமார் மீண்டும் சபைக்கு சென்றார்.

இம்முறை கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை. தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெறவில்லை.

அதேவேளை, மலையக வரலாற்றில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து, மக்கள் பிரதிநிதித்துவம்மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாத நிலையில், இம்முறை தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசிரியர் சுந்தரலிங்கம் பிரதீப் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 711 விருப்பு வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவாகியுள்ளார்.

மலையக அரசியல் வரலாற்றில் 1947 முதல் 2020 ஆம் ஆண்டுவரை மலையகத்திலிருந்து தமிழ் பெண் எம்.பியொருவர் தெரிவாகவில்லை. இம்முறை தேர்தலில் இந்நிலைமை மாறியுள்ளது. மூன்று மலையக பெண் எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும், நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய கலைச்செல்வியும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராசும் வெற்றிபெற்றுள்ளனர். மாத்தறை மாவட்டத்திலிருந்து மலையக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். அதேபோல சரோஜாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படுவதற்குரிய சாத்தியமும் உள்ளது.

2020 பொதுத்தேர்தலில் மலையகத்திலிருந்து 9 எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். இவர்களில் அறுவர் இம்முறை தோல்வி அடைந்துள்ளனர். மனோ கணேசன், வேலுகுமார், உதயகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரால் சபைக்கு தெரிவாக முடியாமல்போனது. இம்முறை மக்கள் வாக்குமூலம் 8 எம்.பிக்கள் சபைக்கு தெரிவாகியுள்ளனர்.
ஜீவன் தொண்டமான், பழனி திகாரம்பம், இராதாகிருஷ்ணன் ஆகியோரைதவிர ஏனைய ஐவரும் புது முகங்கள். தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சனத்

Related Articles

Latest Articles