” எனது தந்தையான அமரர் பி. சந்திரசேகரனின் உருவப் படத்தையோ அல்லது அவரின் பெயரையோ, மலையக மக்கள் முன்னணி பயன்படுத்தக்கூடாது.” என்று அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எனது தந்தை அமரர் சந்திரசேகரன் ஆரம்பித்த தொழிற்சங்கத்தை தற்போது வியாபாரத்திற்காக தலைமைகள் பயன்படுத்துகின்றனர்.
தொழிற்சங்க செயற்பாடுகளை சிலர் தங்களது வயிற்றுப்பிழைப்பு வியாபாரமாக்குவதை நான் எதிர்க்கின்றேனே தவிர, தொழிற்சங்க செயற்பாட்டுக்கு ஒருபோதும் எதிரியல்ல. தொழிற்சங்கம் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்படும் அமைப்பாகும்.
ஆனால், அவர்களுக்காக எதுவுமே செய்யாமல், தேர்தல் காலங்களிலும், அங்கத்துவ படிவம் சேர்க்கும் காலங்களிலும், பணத்தைக்காட்டி தம்மை வளர்த்துக்கொள்ளும் சில வியாபார தொழிற்சங்கங்களையே நான் எதிர்க்கின்றேன்.
எனது தந்தை அமரர் சந்திரசேகரன் ஆரம்பித்த தொழிற்சங்கத்தை தற்போது வியாபாரத்திற்காக தலைமைகள் பயன்படுத்துகின்றன.மக்களுக்காக தொழிற்சங்கம் ஊடாக எத்தனை வேலைத்திட்டங்கள் அல்லது சேவைகளை செய்தார்கள்?
எனவே, இனியும் வியாபார நோக்கத்திற்காக எனது தந்தையின் படத்தையோ அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி அங்கத்துவம் சேர்க்க வேண்டாம் என மலையக மக்கள் முன்னணிக்கும் மலையக தொழிலாளர் முன்னணிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
துணிவிருந்தால் கட்சியைச் சேர்ந்தவர்களின் படத்தை காட்சிப்படுத்தி, அதன் கொள்கைகளைக் கூறி மக்களை சந்தியுங்கள்.” – என்றும் அனுசா சவால் விடுத்துள்ளார்.










