கைது வேட்டை மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சூளுரைத்தார்.
பெண் உரிமைகள் பற்றி பேசும் தற்போதைய அரசாங்கம்தான், 97 வயது பாட்டியை கைது செய்து, உணவுகூட வழங்காமல் விசாரணை நடத்தியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொள்கைக்காகவே நாம் அரசியல் நடத்துகின்றோம். மாறாக அதிகாரத்துக்காக அரசாங்க பலத்தை பயன்படுத்துவதில்லை. பலவந்தமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முற்படுவதும் இல்லை.
வெளிநாட்டு சக்திகள் பணம் செலவளித்து கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வைப்பதற்கு முற்பட்டபோதுகூட, அது ஜனநாயக விரோத கோரிக்கை என தெரிந்தும் மக்களுக்காக கோட்டாபய ராஜபக்ச பதவி துறந்தார்.
அன்று முதல் இன்றுவரை நாம் மக்களுக்காக அரசியல் நடத்துபவர்கள். பொய்கூறி ஆட்சிக்கு வரப்போவதில்லை. நாட்டுக்கு துரோகம் இழைத்ததும் கிடையாது.
எனது பாட்டியைக்கூட விட்டுவைக்கவில்லை. அவரையும் கைது செய்கின்றனர். இது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும். எனினும், நாட்டிலுள்ள நீதித்துறை மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அதன்மூலம் நிவாரணம் கிட்டும்.” – என்றார்.