மத்துகம தமிழ் பாடசாலை கனவு என்று நனவாகும்?

களுத்துறை மாவட்டத்தில் 1 AB தரத்திலான 22 சிங்களமொழி பாடசாலைகளும், 7 முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கி வருகின்ற போதிலும் தமிழ்ப்பாடசாலை ஒன்றுகூட இல்லை.

மத்துகம கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரையில் சென் மேரிஸ் தமிழ்ப்பிரிவும் க.பொ.த சாதாரண தரம் வரையில் சி. டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர தமிழ்ப்பிரிவும் இயங்கி வருகின்றன. இருப்பினும் இப்பாடசாலைகளின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு திருப்தி இல்லை.
இங்கு போதிய இடவசதி மற்றும் தேவையான வளங்கள் கிடையாது பல்வேறு குறைபாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்களுக்கு முகங்கொடுத்த நிலையில் குறிப்பிட்ட கட்டிடங்களுக்குள் முடங்கிய நிலையில் தமிழ்மொழிமூல கல்வி நடவடிக்கைகள் மட்டும் ஓரளவுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முறையான, சரியான, ஒழுங்கான, வசதியான, தரமான, வளமான தமிழ்ப் பாடசாலையொன்று இல்லாத காரணத்தால் தமிழ் மாணவர்கள் பலர் சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளிலும், வெளிப்பிரதேச பாடசாலைகளிலுமே கல்வி கற்று வருகின்றனர்.
இதனால் சகல வசதிகளுடனும் கூடிய தனியானதொரு தமிழ்ப்பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்த புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பழைய மாணவர்கள் பலரும் ஒன்றிணைந்து பல வருடங்களுக்கு முன்னர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர். எனினும் அம்முயற்சி கைகூடாது தோல்வியில் முடிவடைந்தமையால் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் மனம் தளர்ந்து போனார்கள்.
அன்று அமைச்சராக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கை தந்திருக்கலாம். ஆனால் அவர் அதை கவனத்தில் கொள்ளவில்லை. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாணசபைத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கிய இ.தொ.காவிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதுவும் வெற்றியளிக்கவில்லை.

 

தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால கனவை நனவாகக் காணவேண்டும் என்பதால் பாடசாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்கள் தம் முயற்சியைக் கைவிடவில்லை.

2015இல் பதவிக்கு வந்த நல்லாட்சியில் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரான மனோகணேசனிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவரும் இதனை ஏற்று நிறைவேற்றி வைப்பதாக உறுதியளித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். முதற் கட்டமாக அன்றைய மேல் மாகாண ஆளுநராக இருந்த கே. சீ. லோகேஷ்வரனிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டு தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான தமிழ்ப்பாடசாலை அமைப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பாடசாலை அமைப்பதற்கென இந்திய அரசு 300 மில்லியன் தந்துதவ தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 16.12.2016 இல் களுத்துறை காடன்பீச் ஹோட்டலில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் விசேட அழைப்பின் பேரில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான மத்துகம நகரில் தமிழ்ப்பாடசாலை அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தியே இன்று நான் இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றேன் என்றார்.

கோரிக்கையை ஏற்று தமிழ்ப்பாடசாலை அமைக்க ஐந்து ஏக்கர் காணி ஒதுக்கித்தர இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஏகமனதாக முடிவெடுத்தாகவும் நாளை வரும் எனது பிறந்தநாளைக்கு முன்கூட்டியே தனக்கு கிடைத்த பரிசு இதுவாகும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறவும் செய்தார்.

“ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறந்துவிடுவதை விட வேறு ஒரு சிறந்த பரிசு எனக்கு கிடைக்கப்போவதில்லை. இது எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பங்களிப்பினால் கிடைத்த வெற்றியாகும். வட களுத்துறையில் எடுக்கப்பட்ட இந்த இன நல்லுறவுத் தீர்மானம் வட இலங்கைக்கும் நல்லுறவுச் செய்தியை அது கொண்டுவரும் என எதிர்பார்க்கிறேன்” என்றும் அக்கூட்டத்தில் ஆற்றிய தமது உரையின்போது குறிப்பிடவும் செய்தார்.

முன்னாள் அமைச்சரினால் விடுக்கப்பட்ட இந்தச் செய்தி களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. தமிழ்ப்பாடசாலை நிச்சயம் உருவாகும். அமைச்சர் மனோ கணேசன் தொட்ட காரியத்தை இடைநடுவில் கைவிடுபவர் அல்லர். அதன் முடிவைக் காணும் வரையில் போராடுபவர். சொன்னதைச் செய்பவர். செய்வதைச் சொல்பவர். தமிழ்ப்பாடசாலை அமைக்கும் விடயத்தை அவர் ஆரம்பித்து விட்டார்.

இதில் அவர் வெற்றிகண்டு தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார். 2017ம் ஆண்டு டிசம்பர் அவரது பிறந்த நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு வைக்கப்பட்டும் என தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்திருந்தனர்.

பாடசாலை அமைப்பதற்குத் தேவையான காணி மத்துகம, யட்டதொல தோட்டம், மத்துகம பிரிவில் 5 ஏக்கர் இறப்பர் காணி அடையாளங் காணப்பட்டு காணிக்குரிய இழப்பீட்டுத் தொகையாக சுமார் 13 லட்ச ரூபாவை தமது அமைச்சினுௗடாக குறித்த நமுனுகுல பெருந்தோட்டக் கம்பனிக்கு செலுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னாள் அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

ஆனால் சட்டரீதியாக காணியைப் பொறுப்பேற்றுக் கொள்வதில் தடையும், தாமதமும், இழுபறியும் ஏற்பட்டு காலம் கழிந்தது. மறுபுறத்தில் தமிழ்ப்பாடசாலையொன்று உருவாவதை விரும்பாத இனவாதப் போக்கு படைத்த சிலர் ஏன் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சில பிற்போக்குவாதிகளும் கூட நேரடியாகவும், மறைமுகமாகவும் பல விமர்சனங்களை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் முன்னாள் அமைச்சரின் பிறந்தநாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ அடிக்கல் நாட்டி வைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அந்த நிகழ்வு இடம்பெறாதது ஏமாற்றத்தைத் தந்தது.

24.7.2018இல் களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கமிட்டிக் கூட்டத்தில் மீண்டும் ஒருதடவை கலந்துகொண்ட மனோ கணேசன் “தமிழ்ப்பாடசாலையொன்று சுயாதீனமாக இயங்க இடமளிக்க வேண்டும்” என சற்று கடுந்தொனியில் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கும் பொருட்டு மனோ கணேசன் எடுத்துள்ள முடிவுக்கு இடமளித்து ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்களான குமாரவெல்கம மற்றும் மகிந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினர்.

ஆனால் 2018ம் ஆண்டு அவரது பிறந்தநாளும் கடந்துவிட்டது. எனினும் அடிக்கல் நாட்டப்படவில்லை. 19.02.2019இல் இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ”விரைவில் தமிழ்ப்பாடசாலைக்கான அடிக்கல் தமது தலைமையில் விமரிசையாக நாட்டி வைக்கப்படும் என சூளுரைத்தார்.

2019ம் ஆண்டு அவரது பிறந்தநாளும் கடந்துவிட்டது. ஆனால் அவரது கூற்று பலிக்கவில்லை. அடிக்கல் நாட்டப்படாத நிலையில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அமைச்சர் பதவியையும் அவர் இழந்தார்.

அடையாளங்காணப்பட்ட காணியை சட்டரீதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வதில் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏற்பட்ட தடை தாமதத்துக்கான காரணம் என்ன? சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடார்” என்ற கதையாகிவிட்டது. தமிழ்ப்பாடசாலை அமைப்பதில் ஏற்பட்ட தடை தாமதத்துக்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தோட்டத் தொழிலாளருக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பாடசாலை அமைப்பதற்குத் தேவையான காணியை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுவரும் தடை, தாமதம், இழுபறி, முட்டுக்கட்டைகள் வரவேற்கத்தக்க விடயமல்ல. தமிழ்ப்பாடசாலை அமைப்பதில் அன்று அதிகாரத்தில் இருந்த ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் கைகூடி வரவில்லை. நல்லாட்சியிலிருந்த மனோ கணேசனின் பதவிக்காலத்திலும் கைகூடவில்லை.

இனி இந்த விவகாரத்தைப் பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்ல முன்வரப் போவது யார்? மத்துகமவில் தமிழ்ப்பாடசாலை அமைத்தல் மற்றும் களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் தற்போதைய ஆட்சியின் பங்காளராக இருந்துவரும் இ.தொ.காவே முன்வரவேண்டும்.

இங்கிரிய மூர்த்தி

நன்றி தினகரன்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles