பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் ஒவ்வொன்றுடனும் பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் கோரும் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான முன்மொழிவுகள் வரவு – செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அப்பால் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதற்கமைய தோட்ட நிர்வாகங்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை மாத்திரமின்றி தோட்டப்புறங்களில் சுகாதார நிலைமை, மாணவர்களின் கல்வி, இளைஞர்களுக்கான தொழில் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
பல்வேறு அமைச்சுக்களின் ஊடாக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தோட்டப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான பணிக்குழாமினரை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது என்றார்.