திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 68 மற்றும் 74 வயதுடைய இரு பெண்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் பெண்ணின் வீட்டிலேயே கொலை இடம்பெற்றுள்ளது.
இந்த பெண் மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் அந்த வீட்டில் 15 வயதான அவரது மகள், பெண்ணின் தாய், பெரியம்மா உறவுடைய மற்றுமொரு பெண் என மூன்று பேர் மாத்திரம் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை வேளை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதன்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர், அந்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அம்மம்மா தன்னை எப்போதும் திட்டுவதாகவும் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்துவிட்டதாகவும் பொலிஸாரிடம் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பின்னர், அந்த சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.