ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த அமைப்பின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
காசா, மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதில் மேற்குகரை பகுதியை, பத்தா என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது.
இந்த பத்தா அரசு பெரும்பாலும் இஸ்ரேல் அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் பத்தா கட்சியே காசா பகுதியையும் ஆட்சி செய்து வந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஹமாஸ் அமைப்பு காசாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் காசா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மிக நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இதில் 1,195 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் இ ராணுவம் நேரடியாக போர் தொடுத்தது. ஹமாஸின் அரசியல் தலைவர்கள், ராணுவ தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து உள்ளன.
கடந்த 2023-க்கு முன்பு ஹமாஸ் அமைப்பில் 30,000 பேர் இருந்தனர். தற்போது அந்த அமைப்பில் 15,000 பேர் மட்டுமே உள்ளனர்.ஆயிரக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டனர்.
ஹமாஸ் அமைப்பில் இருந்தவர்களுக்கு அவரவர் பதவிக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோல காசா ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வந்த அரசு ஊழியர்களுக்கும் இதே அளவு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இஸ்ரேலின் ராணுவத்தின் போரால் காசா பகுதியின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்து உள்ளது.
ஈரான், கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு பெருமளவு நிதியுதவி கிடைத்து வந்தது.
அமெரிக்கா, இஸ்ரேலின் அதிதீவிர நடவடிக்கைகளால் இந்த நாடுகளில் இருந்து ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி கிடைப்பது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் அந்த அமைப்பின் அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
நிதி நெருக்கடியால் ஹமாஸ் அமைப்பில் புதியவர்களை சேர்க்க முடியவில்லை. போதிய நிதி ஆதாரம் இல்லாததால் ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் முடியவில்லை. மாதக்கணக்கில் ஊதியம் கிடைக்காத நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.