ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸ் 3ஆவது நாளில் இந்திய அணி 36 ஓட்டங்களுக்குள்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாடுவதாகஅறிவித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில்முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
2 ஆம் நாள் ஆட்டம் ஆரம்பமானதுமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், 300 ஓட்டங்களை இந்தியா எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேற்கொண்டு 11 ஓட்டங்களை மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244- ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். மேத்யூ வேட் (8 ரன்கள்) ஜோ (8 ரன்கள்) ஆகியோர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய லாபுசேன் (47 ரன்கள் ) ஓரளவு தாக்குப்படித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. உமேஷ் யாதவும் தன் பங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.
பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. பிரித்வி 4 ரன் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடும்பட்சத்தில் இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.