செம்மணி புதைகுழியில் இரு சிறார்களின் எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக் கூடுகளில் நேற்றைய தினம் வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், புதிதாக எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles