‘பெருந்தோட்டத்துறை சுகாதாரம் தேசிய மயப்படுத்தப்பட வேண்டும்’

இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதாரமானது, அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட சுகாதாரம் தேசிய மயப்படுத்தல் தொடர்பில் கடந்த பல வருடங்களாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள போதும் அசாதாரண சூழ்நிலைகளின்போது தோட்ட மக்களுக்கு ஏற்படும் சுகாதார ரீதியான பாதிப்பை குறைப்பதற்கு அரசு  நடவடிக்கையை துரிதகதியில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதார நிலைமைகள் காலனித்துவக் காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று வரை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. எவ்வாறெனினும் ஏனைய துறைகளுடன் பார்க்கும்போது பெருந்தோட்ட சுகாதாரம் மற்றும் சமூக,பொருளாதாரதுறைகள் மிக பின்தங்கிய நிலைமையிலேயே காணப்படுகின்றன.

இலங்கையில் இன்றைய சுகாதார கொள்கை அனைவருக்கும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றது.எனினும் சில பிரித்தானிய கால சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மனித அபிவிருத்தி தாபனமானது பெருந்தோட்ட சுகாதாரம் தேசிய மயப்படுத்தல் தொடர்பாக கடந்த பல வருடங்களாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளது.

எனவே இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளின் போது மலையக தோட்டத்துறை சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைந்து காணப்பட்டால் அம்மக்களுக்கு ஏற்படும் சுகாதார ரீதியான பாதிப்பை குறைப்பதற்கு வழிவகுக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles