பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1, 700 ருபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை 1300 ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஈரான் இஸ்ரேல் மோதல் காரணமாக எமது தேயிலை ஏற்றுமதிக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது ஆடை உற்பத்தியாகும். ஆனால் இன்று அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் ஆடை உற்பத்தி தளம்பல் நிலைக்கு சென்றுள்ளது.
அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அது தொடர்பில் இதுவரை எந்த பிரதிபலிப்பையும் காணவில்லை என்றே தெரிவிக்க வேண்டி இருக்கிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பு 44 வீதம் தான் என அறிவிக்கப்பட்டால் எமது நாட்டின் ஆடைத்தொழிற்சாலைகளுக்கு என்னவாகும் என்பது கேள்விக்குரியாகும். அதனால் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறுப்புவாய்ந்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழவேண்டும்.
தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் அந்த தொழிலில் இருப்பவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும். அவர்களுக்கு போதுமான சம்பளம் இல்லை. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் 1700 ரூபா வழங்குவதாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இதுவரை 1300 ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அடிப்படை பொருட்களின் விலை அதிகரிப்பால், அவர்களின் வாழ்க்கைச்செலவை கொண்டுசெல்ல 1700 ரூபாவும் போதுமானதாக இல்லை.” – என்றார்.